search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதவை சான்றிதழ்"

    திருவண்ணாமலையில் விதவை சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். #TahsildarArrested
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நயம்பாடி கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகள் வெண்ணிலா (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சவுந்தர் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். வெண்ணிலாவின் தந்தை காளியப்பன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின் கணவர் சவுந்தரும் கடந்த 2016-ம் ஆண்டு இறந்து விட்டார்.

    இதனால் குழந்தைகளுடன் வெண்ணிலா சிரமப்பட்டு வந்தார். அவருக்கு அரசின் உதவிகள் பெற விதவை சான்றிதழ் தேவைப்பட்டது. இதற்காக அவர் தனக்கு விதவை சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த மார்ச் 12-ந் தேதி கலெக்டரிடம் மனு அளித்தார். அவரது மனு மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து வெண்ணிலாவின் மனுவை கிராம நிர்வாக அலுவலர் சரிபார்த்து வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பினார். அதனை பரிந்துரைத்து செங்கம் தாசில்தார் ரேணுகாவுக்கு வருவாய் ஆய்வாளர் அனுப்பினார்.

    ஆனால் அவர் சான்றிதழ் வழங்காமல் காலதாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெண்ணிலா தனது அக்காள் கணவர் கோபால கிருஷ்ணனுடன் தாசில்தாரை நேரில் சந்தித்து விதவை சான்றிதழ் வழங்க கேட்டுள்ளார்.

    அப்போது தாசில்தார் ரேணுகா சரிவர பதில் அளிக்கவில்லை. பின்னர் சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என தாசில்தார் ரேணுகா கேட்டுள்ளார்.

    வெண்ணிலா லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதுகுறித்து தன்னுடன் வந்த தனது அக்காளின் கணவர் கோபாலகிருஷ்ணனிடம் கூறவே அவர் அது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் சுமார் 2 மணி அளவில் கோபாலகிருஷ்ணன் செங்கம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.

    அங்கு ஏற்கனவே திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் போலீசார் மறைந்திருந்தனர். கோபாலகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தார். கோபாலகிருஷ்ணன், தாசில்தார் ரேணுகாவிடம் அந்த ரூபாய் நோட்டுக்களை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேணுகாவை கையும் களவுமாக பிடித்தனர்.

    அதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகம், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்தது. பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியே இருந்து யாரும் உள்ளே வராதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாசில்தார் ரேணுகாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் ½ மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தாசில்தார் ரேணுகாவை செங்கம் ராஜவீதியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலும் மேலும் சோதனையிட்டனர். பின்னர் அவர் மீண்டும் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேலுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தாலுகா அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். அங்கு அவரது முன்னிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, தாசில்தார் ரேணுகாவை கைது செய்தனர்.  #TahsildarArrested



    ×